அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன் அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (வெளி 6: 9-11)

நம்முடைய ஆராதனையின் உண்மை நம் ஆண்டவருடைய பலிபிடத்தின் கீழேதான் முழுமை அடைகிறது.

பானபலி:

பாருங்கள் இங்கே நான்கு குதிரைகளின் ஆதிக்கம் வந்த பிறகும் (அதாவது பசியும் , பட்டினியும், கொடுமையும், பிசாசினுடைய சூழ்ச்சியும் சூழ்ந்து இருக்கும் நேரத்திலும்) விசுவாசிகள் தேவவசனத்தையும், சாட்சியாக வாழ்வதையும் விட்டுவிடாமல், தங்கள் ஜீவனை கர்த்தருடைய பலிபீடத்தில் பானபலியாக வார்க்க ஒப்புக்கொடுத்தார்கள்.

நான் இங்கே பானபலி என்று குறிப்பிடுகிறேன். ஏனென்றால் புதிய ஏற்பாட்டிலே , இயேசுவின் சரீரம் சர்வாங்க தகன பலியாகவும், பாவநிவாரண பலியாகவும் வார்க்கப்படுகிறது. நீங்கள் (எபிரெ 10:7-12) ஐ படித்தீர்களானால் இது உங்களுக்கு விளங்கும். அங்கே 8வது, 9வது வசனத்தை வாசித்தீர்களானால் இயேசுவானர், சிலுவையிலே புதிய உடன்படிக்கையை நிலைநிறுத்த சர்வாங்க தகன பலிகளையும், பாவநிவாரண பலிகளையும் நீக்கிப் போட்டார் என்று போடப்பட்டிருக்கிறது.

இதனால் தான் பவுல் அப்போஸ்தலர் (பிலி 2:17) யிலும், 2தீமோ 4:6 யிலும் தன்னுடைய சாட்சியின் மரணத்தை பானபலியாக விவரிக்கிறார்.

முக்கியமாக நீங்கள் பிலி 2:17 யை கவனித்தீர்களானால் அங்கே பவுல் அப்போஸ்தலர் விசுவாசிகளின் பலியின் மேலும், ஊழியத்தின் மேலும் தான் பலியாக வார்க்கப்படுகிறதாக போடப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நம் விசுவாச நடக்கையும், ஊழியமும் ஒருவிதமான பலிதான்.

ரோமர் 8:13 னின் படி, விசுவாசிகளாகிய நாம் ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழிக்க வேண்டும். இது ஒருவிதமான பலியாகும். இன்றைக்கு அநேகர் தங்கள் மாமிச சிந்தையையும், உலக சினேகத்தையும் விட்டுக்கொடுக்காமல் விசுவாசிகளாக வாழ விரும்பி தோல்வி அடைகிறார்கள்

பட்சிக்கும் அக்னி:

இப்பொழுது இந்த பானபலியை புரிந்து கொள்ள தேவனுடைய பலிபீடத்தை உற்று நோக்குவோம். ஆதி 22:7 ல் ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி, தகனபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்கிறான். அதற்கு ஆபிரகாம், அதை தேவன் பார்த்துக் கொள்வார் என்று தன் மகனிடம் சொல்கிறார். தேவன் அன்றும், இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும் தேவ ஆட்டுக்குட்டியாக இயேசுவை ஆபிரகாமைப் போல விசுவாசிக்கிற விசுவாச சந்ததிக்கு கொடுத்தார்.

மேலும் ஆதி 15:17 ல் ஆபிரகாம் கொடுத்த பலியை தேவன் அக்கினி ஜூவாலையை அனுப்பி பலியை தகனிக்க வைத்தார். இன்கே ஆபிரகாமின் கீழ்படிதலை நாம் காணலாம். தேவன் இந்த முறை வெரும் மிருகங்களை கொண்டுவர சொல்லுகிறார். ஆபிரகாம் அதற்கு கீழ்படிந்தான். அவன் நெருப்பைக் கொண்டு வரவில்லை. ஆனால் ஈசாக்கை தகனபலியாக தேவன் கேட்டப்போது, அவன் தகனபலிக்கு தீயையும் கொண்டு போகிறான். இதைப் போலவே பலியை பட்சிக்கும் அக்கினியை நாம் நியாதிபதி 6:21; 13:20 லும், 1 நாளாக21:26 லும் காணலாம். இந்த பட்சிக்கிற அக்கினி, தேவனுடைய சித்தத்தின்படியே அந்த பலி அனுசரிக்கப்படுகிறதற்கு ஒரு அடையாளமாக காணப்படுகிறது.

இயேசுவானவரும் பரிசுத்த ஆவியின் மூலமாய் தேவனுடைய சித்தத்தின்படியே தன் ஜீவனை பலியாக ஒப்புக்கொடுத்தார். ( எபிரெ9:14) இதிலிருந்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம் இயேசு கொடுத்த அந்த பலி தான் பரலோகத்தின் பலி பீடத்திலே பரிசுத்த ஆவியானவரினாலே சதாகாலமும் தகனிக்கப்பட்டு வருகிறது.(எபிரெ 10:12)

பிழித்தெடுத்தல் :

அந்த தகனிப்பை மேன்படுத்துவது தான் பானபலி. பானபலி என்பது பிழிக்கப்பட்ட எண்ணெயினாலும், திராட்சைரசத்தினாலும் உண்டாக்கப்படுகிறது.(ஆதி 35:14: யாத்தி 29:40). அதாவது இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமான சித்தமும் இன்னவென்று பகுத்தறிந்து, அவருக்கு ஏற்ற பரிசுத்தத்திலும், பிரியத்திலும் நம்முடைய சரீரங்களை ஜீவப்பலியாக ஒப்புக்கொடுக்கும் போது, (ரோம12:1,2) நம்முடைய கொழுமையானவைகள் எண்ணெயாக்கப்படுகிறது. நாம் இயேசுவோடு உறவு கொண்டு, கனி கொடுத்து, பிழியப்படும் போது அது திராட்சைரசமாக மாறுகிறது. இதுவே தேவனுக்கு ஏற்ற பானபலி. நாம் நம்முடைய வாழ்க்கையை தேவனுக்கென்று பானபலியாக ஊற்றப்படும்போது, அவருடைய பலிபீடத்தின் அக்கினி தழல் இன்னும் ஓங்கி எரிகிறது. இப்படி எரிந்து சாம்பலானவர்களுடைய ஆத்துமா தேவனுடைய பலிபீடத்தின் கீழே சென்றடைந்து, பரலோகத்தின் நியாயத்தீர்ப்புக்காக காத்திருக்கிறது.

தயார் நிலை :

இப்படிப்பட்ட பலியாக எல்லா விசுவாசிகளும் மாறுவார்களா என்பது நம்முடைய கேள்வியாக இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட பலியாக வார்க்கப்பட எல்லா விசுவாசிகளும் தயாராக இருக்க வேண்டும். தானியேல் புஸ்தகத்திலே தானியேலுடைய நண்பர்கள், தேவனுக்காக பாபிலோன் இராஜாவுடைய அக்கினிக்கு இரையாக தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். ஆனாலும் அந்நிய அக்கினி அவர்களைத் தொடவில்லை. 2 திமோ3:12 ல், ” கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாய் இருக்கிற யாவரும் துன்பப்படுவார்ககள்” என்று எழுதி இருக்கிறது. இந்த துன்பத்திற்கு நாம் தயாராய் இருக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் பிசாசுனுடைய சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்க முடியும். நாம் கிறிஸ்துவுடனே பாடுபட்டால் அவரோடு கூட மகிமையும் அடைவோம். (ரோம 8:17, பிலிப்ப 1:29)

Leave a comment

Trending