ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
பிலிப்பியர் 1:29
நம்முடைய பிறப்பிலிருந்தே பாடுகளை தவிர்க்க விரும்புகிறோம். பாடுகளை அனுபவிப்பது ஒரு கசப்பான காரியமாக நாம் கருதுகிறோம். நல்ல சுகத்தோடும், பாதுகாப்போடும் வாழ விரும்புகிறோம். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விசேஷித்த இரட்சிப்பை நாம் பெற்றுக்கொண்ட பொழுது, பாடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உண்டாகிறது. ஆனால் ஒரு விசுவாசி இரண்டு விதமான பாடுகளை சந்திக்க வேண்டியதாயிருக்கிறது. முதல் விதமான பாடுகள், உலகப்பிரகாரமான பாடுகளாக இருக்கிறது. இயேசு நம்மிடத்தில் வந்ததே, நமக்கும் இந்த உலகதிற்குமிடையே இருக்கும் தொடர்பை துண்டிக்க தான். நாம் உண்மையிலேயே இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நம்முடைய சுயமும், உலகப்பிரகாரமான குறிகோள்களும், ஆசைகளும் சாக வேண்டும். இயேசு நமக்குள் வாழ வேண்டுமானால், உலகத்தை நாம் புறக்கணிக்க வேண்டும். இயேசுவையும், உலகத்தையும் ஒரே சமயத்தில் நமக்குள்ளே வைத்திருக்க முடியாது. அனேகர் இயேசுவையும், உலகத்தையும் தங்களோடு வைக்க முயற்சி செய்து, இயேசுவினுடைய இரட்சிப்பின் முழு சந்தோஷத்தை அடையாமல் போகிறார்கள். இயேசு நம்மை உலகக் கவலையிலிருந்து விடுவிக்க வரவில்லை. அவர் நம்மை இந்த உலகத்திலிருந்தே விடுவிக்க வந்தார். நாம் இந்த உலகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக மாறி விட்டால், இந்த உலகத்தின் பாடுகள் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
இன்னொரு விதமான பாடு நம்முடைய ஆண்டவருடைய சாட்சியாக இருப்பதின் நிமித்தம் வருகிறது. இந்தவித பாடு சுவாரஸ்யமானது. இயேசு மற்றவர்களுடைய இருதயத்தில் பிறப்பதற்காக நாம் பாடுபடுகிறோம். இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிப்பதற்கே இயேசு நம்மை முன்குறித்திருக்கிறார். இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிப்பது நமக்கு களிகூருதலை உண்டாக்குகிறது. இப்படிப்பட்ட பாடுகளுக்கு நம்மை சந்தோஷமாக ஒப்புக் கொடுக்கிறோம். இப்படி பாடு அனுபவிக்கும் போது ஆத்துமாக்களை பரலோக ராஜ்யத்திற்காக ஆதாயப்படுத்தும் பெரிய அறுப்பின் வேலையை நாம் செய்கிறோம். ஒவ்வொரு ஆத்துமாவும் இரட்சிக்கப்படும் போது இயேசு மகிமைப்படுகிறார். அவருடைய மகிமையிலே நம்முடைய மகிமை இருக்கிறது. இப்படிப்பட்ட பாடுகளையே நாம் தேட வேண்டும். நம்முடைய ஆண்டவர் கிருபையுள்ளவராக இருக்கிறார். இப்படிப்பட்ட பாடுகளை நாம் அனுபவிக்கும் போது ஒரு நிமிடம் கூட அவர் நம்மை துக்கப்பட விட மாட்டார். இங்கே பவுலுடைய வாழ்க்கையைப் பாருங்கள். பவுல் சிறைச்சாலையில் இருக்கிறார். அனேகர் அவரை விரோதிக்கிறார்கள். ஆயினும் நல்மனதிலோ, விரோதத்தினாலோ இயேசு பிரசங்கிக்கப்படுகிறதை நினைத்து சந்தோஷப்படுகிறார். நாம் இயேசுவின் சுவிசேஷத்திற்காக பாடு அனுபவிக்கும் போது ஒரு நாளும் சோர்ந்துப் போகமாட்டோம். பிதாவின் வலது பாரிசத்தில் இயேசுவோடு கூட இருப்பதை நாம் உணர்ந்து கொள்வோம். அதே சமயத்தில் நம்முடைய செய்கையினாலே இயேசு கிறிஸ்துவினுடைய பெரிய வெளிச்சம் அநேகரை தொட்டு அவர்களுக்கு நித்திய ஜீவனைத் தரும்.

Leave a comment